பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளதாக இந்தியா கூறும் கில்கித்-பல்திஸ்தான் பகுதியில் பொதுத்தேர்தல் நடத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜூன் 7ஆம் தேதி கில்கித்-பல்திஸ்தான் பகுதியில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்த நிலையில், இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் 1947ஆம் ஆண்டிலேயே சட்டப்பூர்வமாகவும், முழுமையாகவும் இந்தியாவுடன் இணைந்ததாகவும், அதன் ஒரு பகுதியாக கில்கித்-பல்திஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும் என்றும் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறும் பகுதிகளில் தேர்தல் அல்லது நிர்வாக மாற்றங்களை மேற்கொள்வது, அப்பகுதிகளில் நிலவும் மனித உரிமை மீறல்கள், அரசியல் அடக்குமுறை மற்றும் பொருளாதார சுரண்டல் போன்ற குற்றச்சாட்டுகளை மறைக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளின் நிலையை மாற்றும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா ஏற்காது என்றும், அந்த பகுதிகள் மீது இந்தியாவின் உரிமை தொடர்கிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டையும் மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
