காவிரி நீர் பகிர்வு விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று கர்நாடக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக தலைவர் சிவகுமார், காவிரியில் இருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்துவிடுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு குறித்து மாநில அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறினார். இதுதொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பெங்களூரு திரும்பிய பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக அவர் கூறினார்.
தமிழக தரப்பில் நேரில் சந்தித்து சில அம்சங்கள் குறித்து விவாதிக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதுடன், தொலைபேசியிலும் தொடர்புகொண்டதாகவும் சிவகுமார் தெரிவித்தார். தமிழக அதிகாரிகளை மரியாதையுடன் வரவேற்று, உரிய விளக்கங்களை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
காவிரி நீர் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும், அதற்கான சந்திப்புக்கு தாம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மேகதாது உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்த்தேக்கத் திட்டங்கள் மற்றும் நீர்நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்காக ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தேவையான விளக்கங்களை வழங்க அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்கள் கொண்ட குழுவும் தயார் நிலையில் இருப்பதாகவும் சிவகுமார் தெரிவித்தார்.
