டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்திய காலி மது பாட்டில்களை பொறுப்பின்றி சாலைகள், காடுகள் மற்றும் பொது இடங்களில் வீசுவதால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் நோக்கில், மது விற்பனை செய்யும் போது கூடுதலாக ரூ.10 வசூலித்து, காலி பாட்டிலை திருப்பி ஒப்படைத்தால் அந்தத் தொகையை மீண்டும் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதலில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மலைவாசஸ்தலங்களில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் பின்னர் பல மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்த வழக்கு, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மூன்று மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறையை முழுமையாக மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்தப் பணியில் டாஸ்மாக் ஊழியர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இதையடுத்து, திட்டத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக 8 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும், 4 வாரங்களுக்குள் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
