கருப்பு அங்கியில் நீதிமன்றத்தில் ஆஜரான மம்தா பானர்ஜி; அரசியலில் புதிய பரபரப்பு
கொல்கட்டா: மம்தா பானர்ஜி, மேற்கு வங்க அரசியலில் புதிய கவனத்தை ஈர்க்கும் வகையில், வழக்கறிஞர் உடையில் நேற்று கொல்கட்டா உயர் நீதிமன்றம்த்தில் ஆஜராகி வாதாடினார்.
மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23 மற்றும் 29ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலுக்கு பிறகு, திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இதுதொடர்பாக கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மம்தா பானர்ஜி நேரடியாக வழக்கறிஞர் உடையில் ஆஜராகி வாதாடினார்.
நீதிபதிகள் சுஜோய் பால் மற்றும் பார்த்தசாரதி சென் அடங்கிய அமர்வு முன் அவர் வாதிடுகையில், “தேர்தலுக்கு பின் நடைபெற்ற வன்முறையில் சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் தாக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்ட திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழந்துள்ளனர். போலீசார் இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “மேற்கு வங்கம் புல்டோசர் கலாசாரத்தை பின்பற்றும் மாநிலம் அல்ல. மக்களை பாதுகாக்க நீதிமன்றம் உடனடியாக தலையிட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
மம்தா பானர்ஜி கடந்த 1982ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்தில் சில வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடியுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் நீதிமன்றத்தில் வாதாடியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இதற்கிடையே, இந்திய பார் கவுன்சில், மம்தா பானர்ஜியின் வழக்கறிஞர் உரிமம் தொடர்பாக விளக்கம் கோரியுள்ளது. முதல்வராக இருந்த காலத்தில் அவரது வக்கீல் உரிமம் புதுப்பிக்கப்பட்டதா மற்றும் அது தற்போது நடைமுறையில் உள்ளதா என்பது குறித்து மேற்கு வங்க பார் கவுன்சிலிடம் தகவல் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
