புதுடில்லி: “மற்றொருவரின் மதநம்பிக்கையை கட்டாயத்தின் பேரில் மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக பழங்குடியின மக்களுக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பழங்குடியின மாநாட்டில் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
“பொது சிவில் சட்டம் பழங்குடியின மக்களை எந்த வகையிலும் பாதிக்காது. இது தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்” என்றார்.
மேலும், “பாஜ ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் போது, பழங்குடியின சமூகங்களை அதன் வரம்பிற்கு வெளியே வைக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றும் தெரிவித்தார்.
“பொது சிவில் சட்டம் எந்த பழங்குடியின மக்களின் பாரம்பரியங்களிலும், பழக்கவழக்கங்களிலும் தலையிடாது” என்று அமித் ஷா உறுதியளித்தார்.
நக்சல் பிரச்னை குறித்தும் பேசிய அவர், “நக்சல் வன்முறையால் பல ஆண்டுகளாக பழங்குடியின மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. தற்போது நாடு அந்த பிரச்னையிலிருந்து மெதுவாக விடுபட்டு வருகிறது” என்றார்.
மேலும், “பழங்குடியின மக்களை ஆசைவார்த்தைகள் அல்லது தூண்டுதல்கள் மூலம் மதமாற்றம் செய்ய முயற்சிக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
“மற்றொரு நபரின் மதநம்பிக்கையை கட்டாயத்தின் பேரில் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை” என்றும் அமித் ஷா தனது உரையில் வலியுறுத்தினார்.
