குவஹாத்தி: அசாமின் நகாவ்ன் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேபாஷிஷ் சர்மாவை அக்கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.
காலியான நகாவ்ன் தொகுதி
அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் நகாவ்ன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரத்யுத் போர்டோலோய் வெற்றி பெற்றார். பின்னர் அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.
தொடர்ந்து கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திஸ்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் காலியான நகாவ்ன் மக்களவை தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பா.ஜ.க. வேட்பாளராக தேபாஷிஷ் சர்மா
இந்நிலையில், நகாவ்ன் மக்களவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேபாஷிஷ் சர்மாவை அக்கட்சி அறிவித்துள்ளது.
நகாவ்ன் மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த அவர், கடந்த செப்டம்பர் 3-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். தொடர்ந்து செப்டம்பர் 8-ம் தேதி பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், சில நாட்களிலேயே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1992 அசாம் கேடர் ஐ.ஏ.எஸ்.
தேபாஷிஷ் சர்மா ஆங்கிலத்தில் இளங்கலை பட்டமும், மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.
1992-ம் ஆண்டு அசாம் கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
முக்கிய பதவிகளில் பணியாற்றியவர்
அசாம் கவர்னராக இருந்த எஸ்.கே. சின்ஹாவின் சிறப்பு அதிகாரியாகவும் தேபாஷிஷ் சர்மா பணியாற்றியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அசாம் பவனின் குடியிருப்பு ஆணையராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
