சென்னை: கே. அண்ணாமலை, அமைச்சர் ஆதவ் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சனாதன தர்மம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறித்து ஆதவ் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழக வெற்றிக்கழகத்தின் அமைச்சர் ஆதவ் பிரபலமான தமிழ் நகைச்சுவையை மீண்டும் அரங்கேற்றியுள்ளார். ‘ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து’ என்ற நிலைபோல் அவர் பேசியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தற்போது ஆதவ் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை மறந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. அவரைப் போல திமுக தொண்டர்கள் கூட உதயநிதியை பாதுகாக்க இந்த அளவுக்கு செல்லவில்லை” என்றும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
வடஇந்தியாவில் சனாதன தர்மம் இந்து மதத்தின் அடையாளமாக பார்க்கப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் அதே விவகாரம் வந்தவுடன் சமத்துவமின்மையாக மாற்றி விளக்கப்படுவது குழப்பமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“திமுக எம்எல்ஏ உதயநிதி தெரிவித்த பொறுப்பற்ற கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, அமைச்சர் ஆதவ் அவற்றை நியாயப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்” என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
