மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
“செயற்கை நுண்ணறிவு இருமுனை வாள் போன்றது. அது மோசடிகளைக் கண்டறியவும் உதவும்; அதே நேரத்தில் மோசடிகளைச் செய்யவும் பயன்படுத்தப்படலாம்” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டிஜிட்டல் தளங்களை உருவாக்கும் இளைஞர்கள்
இந்திய இளைஞர்கள் புதிய தொழில்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை உருவாக்கி வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
இளைஞர்களின் இந்தப் பங்களிப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகமாக முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தங்களின் மீதான அவநம்பிக்கைகளைத் தாண்டி, இந்தியாவின் இளம் திறமையாளர்கள் வெற்றிகரமாக தொழில்களை உருவாக்கி முன்னேறி வருவதாகவும் அவர் பாராட்டினார்.
டிஜிட்டல் ரூபாய் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்
இந்திய ரிசர்வ் வங்கி தனது டிஜிட்டல் ரூபாய் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் வலியுறுத்தினார்.
மொத்த மற்றும் சில்லறை பரிவர்த்தனைகளுக்கான மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டையும் மேலும் மேம்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
“இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு சக்தி வாய்ந்தது”
இந்தியா உலகின் மிக சக்திவாய்ந்த டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
யுபிஐ மூலம் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், தொழில்நுட்பத்தின் அபாயங்களை கட்டுப்படுத்தும் அதே நேரத்தில், புதுமைகளை பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
2047க்குள் வளர்ந்த நாடு
தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவுத் துறையில் இளம் தலைமுறையினரின் பங்களிப்பு, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வேகத்தை நிர்ணயிக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த மாற்றத்தை எதிர்மறையான கருத்துகளைக் கொண்டு பார்க்காமல், அதை கொண்டாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
