பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் அவதூறு வீடியோக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சட்டவிரோத உள்ளடக்கங்கள் தொடர்பாக, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில், தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக இளைஞர்களிடம் பிரதமர் மோடி பேசிய செல்ஃபி வீடியோ, அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்து வருத்தம் தெரிவித்தது.
எனினும், அந்த விளக்கத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கவில்லை. இதையடுத்து, டெல்லியில் நடைபெறும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆஜராகுமாறு மெட்டா நிறுவன அதிகாரிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிமுறைகளை சமூக வலைத்தளங்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படாத பட்சத்தில் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்புச் சலுகைகள் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நிலைக்குழுத் தலைவர் மற்றும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே தனது சமூக வலைதள பதிவில், பிரதமர் மோடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அவதூறு உள்ளடக்கங்கள் குறித்து தெலங்கானா போலீசார் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், நிதி மோசடி செயலிகள் தொடர்பாக கூகுள் மீதும் ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவில் செயல்படும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளுக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
