சென்னை: தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகள் உடனடியாக அவற்றை நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் K. Annamalai தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, கடந்த ஜூன் 5-ஆம் தேதி ‘We the Leaders’ (இது நம்ம இயக்கம்) என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார். இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து ஏராளமானோர் அதில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. மாநில அளவில் பாஜகவில் பொறுப்பு வகித்த சிலரும் கட்சியை விட்டு விலகி புதிய இயக்கத்தில் இணைந்துள்ளனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்கம் தொடங்கப்பட்ட மூன்று நாட்களிலேயே 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கி வருவதாகவும், அதற்காக அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
தற்போது இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், யாருக்கும் எந்தவித நிரந்தர பொறுப்புகளோ அல்லது பதவிகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். தகுதியானவர்களை தேர்வு செய்து பின்னர் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், சில தன்னார்வலர்கள் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி புதிய அமைப்புகளை தொடங்கி, மாவட்ட வாரியான பொறுப்புகளையும் அறிவித்திருப்பதாக தெரியவந்துள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
அத்தகைய அமைப்புகளுக்கும், We the Leaders இயக்கத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும், நல்ல நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இயக்கத்தின் நோக்கத்தை இது போன்ற செயல்கள் பாதிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்கனவே ‘அண்ணாமலை அன்புக் கூட்டம்’, ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’ உள்ளிட்ட அமைப்புகளுக்கு தனது பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பே கடிதம் மூலம் அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ‘அண்ணாமலை அன்புக் கூட்டம்’, ‘அண்ணாமலை நற்பணி மன்றம்’, ‘அண்ணாமலை மக்கள் இயக்கம்’ உள்ளிட்ட தனது பெயரை பயன்படுத்தும் அனைத்து அமைப்புகளும் உடனடியாக தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தனது இயக்கத்தில் இணைய விரும்புவோர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே இணைந்து கொள்ளுமாறும் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
