குவஹாத்தி: ஊடுருவல் என்பது தேர்தல் தொடர்பான விவகாரம் மட்டும் அல்ல; அது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய பிரச்னை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: “அசாமில் ஊடுருவல்காரர்கள் பல பகுதிகளில் நுழைந்து, சிறு தொழில்களை கைப்பற்றி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளனர். இதனால், சட்டவிரோத நில ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை பா.ஜ. தொண்டர்கள் வழங்க வேண்டும்.
மாநிலத்திற்குள் ஊடுருவல்காரர்களை அனுமதித்தது காங்கிரஸ் கட்சிதான் என்பதை மக்களிடம் விளக்க வேண்டும். உள்ளூர் மக்களின் உரிமைக்காக பா.ஜ. குரல் கொடுத்து வருகிறது என்பதையும் எடுத்துரைக்க வேண்டும்.
ஊடுருவல் என்பது வெறும் தேர்தல் பிரச்னை அல்ல; அது நாட்டின் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடைய தேசிய பிரச்னை,” என அவர் தெரிவித்துள்ளார்.
