கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 23வது உலக கோப்பை கால்பந்து தொடர் இன்று அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பிரம்மாண்டமாக தொடங்குகிறது.
இந்த தொடரில் முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. உலகின் முன்னணி அணிகள் மோதவுள்ள இந்த தொடர் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரின் தொடக்க ஆட்டம் இன்று மெக்சிகோ சிட்டியில் நடைபெறுகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள உலக தரவரிசையில் 15வது இடத்தில் உள்ள மெக்சிகோ அணி, தென் ஆப்ரிக்கா அணியை எதிர்கொள்கிறது.
மெக்சிகோ அணியைப் பொறுத்தவரை இது அதன் 18வது உலக கோப்பை பங்கேற்பாகும். இதற்கு முன்பு 1970 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிகளில் அந்த அணி காலிறுதி வரை முன்னேறியிருந்தது.
அணியின் கேப்டனாக ரால் ஜிமனெஸ் களமிறங்குகிறார். அவர் இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் 9 கோல்கள் அடித்ததுடன், மேலும் 3 கோல்களுக்கு உதவியுள்ளார். கணுக்கால் காயத்திலிருந்து மீண்டுள்ள சான்டியாகோ மற்றும் அலெக்சிஸ் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
மேலும், ஆறாவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனுபவம் மிக்க கோல் கீப்பர் கிலர்மோ ஒச்சோவாவின் பங்களிப்பும் மெக்சிகோ அணிக்கு முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
