“ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேளை உணவும் கொடுக்கவில்லை” – சீமானை விமர்சித்த இலங்கை எம்.பி.
சென்னை: “ஈழத் தமிழர்களை சந்தித்து ஒரு வேளை உணவு கூட வழங்காதவர் சீமான்” என்று இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் வந்துள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது பல்வேறு அரசியல் கருத்துகளை தெரிவித்தார்.
அப்போது, “முதல்வர் விஜய்யை சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் அவர் முதல்வராக பொறுப்பேற்கும் தருணத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது” என்று கூறினார்.
மேலும், “இலங்கை பாராளுமன்ற பணிகள் காரணமாக அந்த நிகழ்வை நேரில் காண முடியவில்லை” என்றும் தெரிவித்தார்.
தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய அவர், “தமிழக மக்கள் வரலாறு காணாத மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து, “எங்கள் இனம் அழிந்துகொண்டிருந்தபோது திமுக மற்றும் அதிமுக அரசுகள் வேடிக்கை பார்த்தன” என்று குற்றம்சாட்டினார்.
“ஈழத் தமிழர்களுக்காக விஜய் குரல் கொடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீமான் குறித்து பேசிய ராமநாதன் அர்ஜுனா, “ஈழத் தமிழர் பிரச்னையை சீமான் வாக்கு அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினார்” என்றார்.
மேலும், “யாழ்ப்பாணத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் வசிக்கும் எங்கள் மக்களை சந்தித்து ஒரு வேளை உணவு கூட அவர் வழங்கியதாக வரலாறு இல்லை” என்றும் தெரிவித்தார்.
“ஆனால், அந்த மக்களிடமிருந்து தனது அரசியலுக்காக கோடிக்கணக்கில் பணம் பெற்றவர் சீமான்” என்றும் குற்றம்சாட்டினார்.
“அந்த பணத்தை பெற்ற பிறகும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை என்பதே எனது முக்கியமான குற்றச்சாட்டு” என்று கூறினார்.
தொடர்ந்து, “இவர் இதேபோல் தொடர்ந்து செயல்பட்டால், அவரது மகன் அமெரிக்காவில் படிக்கலாம்; ஆனால் யாழ்ப்பாண மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்” என்றும் விமர்சித்தார்.
“அதனால்தான் நான் அரசியலில் சீமானை எதிர்க்கிறேன். தனிப்பட்ட முறையில் அவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, “சீமான் கூறும் ஆமைக்கறி கதைகள் அனைத்தும் பொய்யானவை” என்றும் ராமநாதன் அர்ஜுனா கூறினார்.
