வாஷிங்டன்: ஈரானை ஒரே இரவில் அழிக்க அமெரிக்காவுக்கு திறன் உள்ளது என்றும், அது எந்த நேரத்திலும் நடக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் Donald Trump எச்சரித்துள்ளார்.
மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்தை குறைக்கும் நோக்கில், 15 அம்சங்களை கொண்ட அமைதி திட்டத்தை அமெரிக்கா முன்வைத்தது. ஆனால், Iran அந்த திட்டத்தை ஏற்க மறுத்தது.
இதையடுத்து, போரை நிறுத்த வேண்டும் அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என அமெரிக்கா காலக்கெடு வழங்கியது. இந்த அவகாசம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 24 மணி நேரம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், 45 நாள் போர்நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட அம்சங்கள் கொண்ட வரைவு திட்டமும் இரு நாடுகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதையும் ஈரான் நிராகரித்தது.
இந்நிலையில், ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானத்தில் இருந்து தப்பிய விமானி வெற்றிகரமாக மீட்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, அமெரிக்க ராணுவத்தின் திறனை டிரம்ப் பாராட்டினார்.
அவர் கூறுகையில், ஒரு வீரரை மீட்க நூற்றுக்கணக்கான வீரர்கள் ஈடுபட்டது மிகவும் சிக்கலான மற்றும் ஆபத்தான நடவடிக்கை என்றும், இது வரலாற்றில் முக்கியமான மீட்பு பணியாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவிடம் உள்ள ராணுவ திறன்கள் உலகில் மற்ற எந்த நாட்டுக்கும் இல்லை என்றும், ஈரானின் மையப்பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தும் திறன் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்க வீரரை மீட்கும் நடவடிக்கை குறுகிய நேரத்திலேயே வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும், எந்த அமெரிக்கரையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கசிந்ததாக கூறி, அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
