நியூயார்க்: ஈரானுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் மேலும் நான்கு வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் இலக்குகள் எட்டப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என்றும் தெரிவித்தார்.
இந்த போர் சுமார் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கணித்தார்.
அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தது வருத்தமளிப்பதாக இருந்தாலும் அது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் அவர் கூறினார். மேலும் ஈரானின் அணு ஆயுத செறிவூட்டல் உலக நாடுகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த தாக்குதல் அவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த மோதலில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
தங்கள் தேசிய நலன்களையும் நட்பு நாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
