தமிழக அரசின் 2026–27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை மற்றும் அரசின் கடன் விவரங்களை சட்டசபையில் விளக்கினார்.
பட்ஜெட் உரையின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் மொத்தக் கடன் இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும், தற்போது அது ரூ.10.98 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரசு பொறுப்பேற்ற பிறகு வெளியிடப்பட்ட நிதி மேலாண்மை தொடர்பான வெள்ளை அறிக்கையிலும் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சொந்த வரி வருவாயின் விகிதம், வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட முக்கிய நிதிக் குறியீடுகளில் தமிழகம் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மொத்த வரி வருவாயில் பெரும்பகுதி வட்டி செலுத்துதல் மற்றும் கட்டாயச் செலவுகளுக்கே ஒதுக்கப்படுவதால், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரம் குறைவாக இருப்பதாகவும் அமைச்சர் விளக்கினார்.
இந்த நிதி நெருக்கடியான சூழலிலும், மக்களிடம் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவதுடன், மாநிலத்தின் நிதிநிலையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக இருப்பதாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகத்தை சீரமைக்க குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் அமைச்சர் கூறினார். குறுகியகால அரசியல் ஆதாயங்களை விட, அடுத்த 15 ஆண்டுகளுக்கான நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2026–27 நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.57,775 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அந்த நிதியாண்டில் ரூ.1,07,445 கோடி கடன் பெறவும், ரூ.51,971 கோடி கடனை திருப்பிச் செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
