புதுடில்லி: ஓமன் கடற்கரைக்கு அருகே இந்திய மாலுமிகள் பயணித்த வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸை வெளியுறவு அமைச்சகத்திற்கு நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்குள் மூன்று கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 48 மணி நேரத்திற்குள் இரண்டாவது முறையாக அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸ் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஓமன் கடற்கரைக்கு அருகே இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இந்தியா தனது கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளர் ஜேசன் மீக்ஸ் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற வர்த்தகக் கப்பல்கள் மீது அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டதாக கூறப்படும் தொடர் தாக்குதல்கள் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களின் விளைவாக மூன்று இந்தியர்கள் உயிரிழந்துள்ளதையும், இந்த உயிரிழப்புகள் துயரமானவை மட்டுமல்லாமல் தவிர்க்கப்பட்டிருக்கக் கூடியவை என்றும் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சர்வதேச கடல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதைகளின் பாதுகாப்பு, உறுதித்தன்மை மற்றும் நிலைத்தன்மையை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவின் கடும் கவலைகளை அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் செயல்படும் அமெரிக்கப் படைகள் பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளரிடம் வலியுறுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
