விளாடிமிர் புடின், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவை குறைக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுப்பது உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவின் Saint Petersburg நகரில் செய்தியாளர்களிடம் பேசிய புடின், உலகின் முக்கிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாகக் கூறினார். இந்த முன்னேற்றத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் முக்கிய காரணம் என்றும் அவர் பாராட்டினார்.
மேலும், இந்தியா – ரஷ்யா இடையேயான பரஸ்பர வர்த்தகத்தை தற்போதைய 5.70 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 9.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக புடின் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ரஷ்யாவுடனான உறவை குறைத்துக் கொள்ளுமாறு சில மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்ட புடின், இத்தகைய நடவடிக்கைகள் உலக ஸ்திரத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்தார்.
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டுடன் ரஷ்யாவின் உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்பெறும் என்றும், அதற்கான அனைத்து திட்டங்களும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
