அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்தாண்டு இந்தியா வருவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி மற்றும் நம்பகமான நட்பு நாடாக இருப்பதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையிலான நெருங்கிய நட்பு, இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் ரூபியோ தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் போது பிரான்சில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் சந்தித்து பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை பாராட்டிய ரூபியோ, உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்துவதில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.
