இந்தியா மற்றும் நேபாளம் இடையேயான எல்லை விவகாரம் தொடர்பாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நேபாளமும் சில இந்திய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாக அவர் கூறியிருப்பது விவாதத்தை கிளப்பியுள்ளது.
நேபாள பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் பாலேந்திர ஷா, இந்தியா நேபாளத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதேபோல் நேபாளமும் சில இந்திய பகுதிகளை பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவரம் தனக்கு பிரதமராக பொறுப்பேற்ற பிறகே தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் தொடர்பாக இந்திய அரசிடம் நேபாளம் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாகவும், இந்த எல்லை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த பிரச்னை வரலாற்று பின்னணி கொண்டது என்பதால், இந்தியா மற்றும் சீனாவுடன் மட்டுமல்லாமல் பிரிட்டனுடனும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவான எல்லை தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் அனைத்து தரப்பினரும் பங்கெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
எல்லை விவகாரத்தை ஆராய்வதற்காக வரலாற்றாசிரியர்கள், நில அளவையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அமைத்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.
இதற்கிடையில், பாலேந்திர ஷாவின் கருத்துக்கு நேபாள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து விளக்கமளித்த நேபாள வெளியுறவு அமைச்சகம், பிரதமரின் கருத்து எல்லை ஆக்கிரமிப்பை குறிக்கவில்லை என்றும், எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளின் விவசாயிகள் மாற்றி மாற்றி நிலங்களை பயன்படுத்தும் நடைமுறையையே அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது நேபாள அரசியல் வட்டாரங்களிலும், இந்தியா-நேபாள உறவுகளிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
