“இத்தனை நாள் பேசாமல் இருந்தது என் தவறு” – கண்கலங்கிய ரவி மோகன்
சென்னை: “இத்தனை நாட்களாக நான் பேசாமல் இருந்தது என்னுடைய தவறு” என்று நடிகர் Jayam Ravi உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட எடிட்டர் மோகனின் மகனான ரவி மோகன், 2009ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இருவரும் பிரிந்து வாழும் நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாடகி Kenishaa Francis உடன் ரவி மோகன் நெருக்கமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இருவரும் பொதுவெளியில் ஒன்றாக தோன்றியதையடுத்து இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கெனிஷா கண்ணீருடன் வீடியோ வெளியிட்டு தனது வேதனையை பகிர்ந்திருந்தார். பின்னர், தொடர்ந்து வந்த ஆன்லைன் விமர்சனங்களால் மனவேதனை அடைந்த அவர், சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்து கோவாவுக்கு சென்றதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில், இன்று (மே 16) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது: “இத்தனை நாட்களாக பேசாமல் இருந்ததை நான் முட்டாள்தனமாக நினைக்கிறேன். நான் எதையும் விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவன். ஆனால் சாதுவாக இருந்த என்னை பலர் தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றார்.
மேலும், “திரைத்துறையில் 23 ஆண்டுகளாக இருக்கிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் எனக்கு மிகப்பெரிய அநியாயம் நடந்திருக்கிறது. உண்மைகள் விரைவில் வெளிவரும். நான் என்ன தவறு செய்தேன்? ஏன் என்னை நிம்மதியாக வாழ விட மாட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “என் குழந்தைகள் மீதான பாசத்தை பற்றி யாரும் கேள்வி கேட்க வேண்டாம். அவர்களுக்காகத்தான் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு இருந்தேன். சம்பாதித்துக் கொடுத்த நான் இன்று வாடகை வீட்டில் இருக்கிறேன். அவர்கள் நன்றாக இருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார்.
உணர்ச்சிவசப்பட்டு பேசிய அவர், “எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு அநியாயம் நடந்துள்ளது. ரத்த வாந்தி எடுத்து கொண்டிருக்கிறேன். என்மீது பிளாக் மேஜிக் வைத்துள்ளனர். நான் உயிரோடு இருக்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள்” என்றும் கூறினார்.
மேலும், “நான் முதலில் ஒரு மனிதன். உயிர் போகும் அளவுக்கு ஒருவர் சுரண்டினால் என்ன செய்வார்? கெனிஷாவையும் இங்கிருந்து அனுப்பிவிட்டீர்கள். எனக்கு மிகவும் அநியாயம் நடந்துள்ளது” என்று ரவி மோகன் உருக்கமாக தெரிவித்தார்.
