புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், தேவையெனில் ஆபரேஷன் சிந்தூர் 2.0 மற்றும் அடுத்தகட்ட ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்திய முப்படைகளும் முழுமையாக தயாராக உள்ளன என்றும் ராணுவ தலைமை தளபதி Upendra Dwivedi தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் செயல்பட்டு வந்ததாக கூறப்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில், ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் உபேந்திர திவேதி பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. தற்போது போர் நடவடிக்கைகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. புதிய ராணுவ நடவடிக்கை அவசியமாகும் சூழல் உருவானால், தரைப்படை மட்டுமல்லாமல் விமானப்படை மற்றும் கடற்படையும் தயாராக உள்ளன” என்றார்.
மேலும், “ஆபரேஷன் சிந்தூர் 2.0 மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக முப்படைகளும் தயார்நிலையில் உள்ளன. தற்போதைய கவனம் முப்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும், 24 மணி நேரமும் தயார்நிலையை உறுதி செய்வதிலும் உள்ளது” என்று தெரிவித்தார்.
பாதுகாப்பில் கூடுதல் கவனம்
தற்போதைய போர்க்கள சூழல் குறித்து பேசிய அவர், தொழில்நுட்ப முன்னேற்றங்களால் போர்க்களம் மிகவும் வெளிப்படையானதாக மாறிவிட்டதாக குறிப்பிட்டார்.
“எல்லைப் பகுதிகளில் நடைபெறும் ஒவ்வொரு நகர்வும் எதிர்த்தரப்பினரால் கண்காணிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, நமது வீரர்கள் மற்றும் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என்றார்.
படைகள் நிலைநிறுத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வெற்றியில் நம்பிக்கை
ஒரு நாடு முழுமையாக ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்று தெரிவித்த உபேந்திர திவேதி, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முப்படைகளும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக கூறினார்.
