“ஆதாரமில்லாத பொய்யான குற்றச்சாட்டுகள்”: முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு, திமுக மீது முதல்வர் விஜய் அடுக்கடுக்கான ஆதாரமற்ற மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபையில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
“15 கேள்விகளுக்கு நேரடியாக பதில் கேட்டேன்”
கடந்த வியாழக்கிழமை காவல்துறை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பேசியதாகவும், தவெக அரசின் 116 நாள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரங்களுடன் விளக்கியதாகவும் உதயநிதி தெரிவித்தார்.
மேலும், அரசுக்கு 15 கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு முதல்வர் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கு முதல்வர் விஜய் சுமார் 45 நிமிடங்கள் பதிலுரை ஆற்றியதாகவும், ஆரம்பத்தில் ஆன்லைன் முறைகேடு தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பேசியதை தாங்கள் அமைதியாகக் கேட்டதாகவும் உதயநிதி தெரிவித்தார்.
அதன்பிறகு திமுக மீது எந்தவித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை முதல்வர் முன்வைக்கத் தொடங்கியதாக அவர் விமர்சித்தார்.
“பதில் அளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது”
சில கட்சிக் கூட்டங்களில் திமுக பிரமுகர்கள் பேசியதாக கூறப்படும் கருத்துகளை சட்டசபையில் முதல்வர் விஜய் குறிப்பிட்டு, அவைக் குறிப்பில் பதிவு செய்ததாக உதயநிதி தெரிவித்தார்.
அதற்கு தானும், திமுக உறுப்பினர்களும் பதிலளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என கேட்டதாகவும், ஆனால் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து முதல்வர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அவற்றுக்கு பதிலளிக்க மீண்டும் வாய்ப்பு கேட்டதாகவும், முதலில் ஒப்புக்கொண்ட சபாநாயகர் பின்னர் வாய்ப்பை மறுத்ததாகவும் உதயநிதி தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முதல்வரின் பேச்சை முழுமையாக கேட்டுவிட்டு திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்ததாக அவர் கூறினார்.
“மனப்பாடம் செய்து வந்து பேசியுள்ளார்”
கடந்த வியாழக்கிழமை எழுப்பப்பட்ட விவகாரங்களுக்கு திங்கட்கிழமை பதில் அளிப்பதாக முதல்வர் கூறியிருந்ததை குறிப்பிட்ட உதயநிதி, அதற்காக அவர் தயாராகி வருவார் என எதிர்பார்த்ததாக தெரிவித்தார்.
ஆனால், இன்று மனப்பாடம் செய்ததை ஒப்புவிப்பது போல தவறான தகவல்களையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் முதல்வர் சட்டசபையில் பேசியதாக அவர் விமர்சித்தார்.
“சினிமா வசனங்கள், பஞ்ச் டயலாக் மட்டுமே”
முதல்வர் விஜயின் பதிலுரையில் சினிமா வசனங்கள் மற்றும் பஞ்ச் டயலாக்குகள் இடம்பெற்றதாக உதயநிதி விமர்சித்தார்.
சட்டம்-ஒழுங்கு தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல், விவாதத்தை திசைதிருப்பும் முயற்சி நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுக நிர்வாகிகள் மீது வழக்குகள் இருந்தால், அவற்றை சட்டப்படி நடத்துங்கள் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் உதயநிதி கூறினார்.
போதைப்பொருள், கொலை சம்பவங்கள் குறித்து கேள்வி
தவெகவைச் சேர்ந்தவர்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாக உதயநிதி தெரிவித்தார்.
மேலும், சென்னையில் பட்டப்பகலில் இரண்டு கொலைகள் நடைபெற்றதாகவும், அது குறித்து சட்டசபையில் பேச வாய்ப்பு கேட்டும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரங்களுக்கு பதில் அளிக்காமல் முதல்வர் 1970-களுக்கு சென்றுவிட்டதாகவும் உதயநிதி விமர்சித்தார்.
“மிசா, சர்க்காரியா கமிஷன் பற்றி பேச தகுதி இருக்கிறதா?”
மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து பேச முதல்வர் விஜய்க்கு தகுதி உள்ளதா என உதயநிதி கேள்வி எழுப்பினார்.
மேலும், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை மட்டும் படித்துக் காட்டுவதாகவும், திமுக தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் ஊழல் செய்ததாக தண்டிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், தற்போதைய அரசில் இடம்பெற்றுள்ள சில முன்னாள் அமைச்சர்களை சுட்டிக்காட்டி, திமுகவை விமர்சிக்க தவெக அரசுக்கு தகுதி இல்லை என்றும் உதயநிதி கூறினார்.
“குதிரை பேரத்தில் அரசு ஈடுபட்டுள்ளது”
கே.என்.நேரு வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையையும் உதயநிதி குறிப்பிட்டார்.
தங்களை மிரட்டுவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியதுடன், சட்டப்படி அனைத்து விசாரணைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், முதல்வர் அலுவலக ஆலோசகர்கள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த உதயநிதி, கனிம வளங்கள் தொடர்பாக தன்னிடம் உள்ள ஆதாரங்களை படிப்படியாக வெளியிடுவேன் என்றும் தெரிவித்தார்.
“வக்கற்ற அரசு” என விமர்சனம்
திமுக எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்க முடியாத அரசாக தற்போதைய அரசு இருப்பதாக உதயநிதி விமர்சித்தார்.
மேலும், சட்டசபையில் சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்வதாக உதயநிதி தெரிவித்தார்.
