மதுரை: திருநெல்வேலி கவின் ஆணவ கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், ஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்றும் விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருநெல்வேலியைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (27), சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் காதலில் இருந்ததாக குறிப்பிடப்பட்டது.
இந்த உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர், கவின் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், 2025 ஜூலை 27 அன்று சமரசம் பேச அழைத்த நிலையில், பெண்ணின் சகோதரர் சுர்ஜித் அரிவாளால் தாக்கியதில் கவின் உயிரிழந்ததாகவும் மனுவில் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணகுமார் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
மனுதாரர், விசாரணையை மாவட்ட நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்றும், கவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், ஆணவ கொலை தடுப்பு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்றபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், சி.பி.சி.ஐ.டி. விசாரணை முடிந்து திருநெல்வேலி கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கவின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்றுவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் பி. வடமலை, ஆணவ கொலை தடுப்புக்கான தனி சட்டத்தை இயற்ற அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், மேலும் விசாரணைக்கு எதுவும் இல்லை என்றும் கூறி வழக்கை முடித்தனர்.
