ராயபுரம்:
“பதவி, பொறுப்பு கிடைத்ததால் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன்; அது தவறில்லை. ஆசிர்வாதம் பெறுவது தமிழர்களின் பண்பு,” என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராயபுரம் தொகுதி வேட்பாளர் ஜெயகுமார் மற்றும் துறைமுகம் தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து, வண்ணாரப்பேட்டை கல்மண்டபம் சாலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசினார்.
அப்போது, தங்களை அரசியலில் உயர்த்தியவர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா என்றும், அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுவதில் தவறு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
தான் கட்சியின் அடிமட்டத்தில் இருந்து உழைத்து முன்னேறியதாகவும், அந்த அனுபவமும் பாடுபாடும் தான் இன்றைய நிலையை உருவாக்கியதாகவும் கூறினார். இதை உதயநிதி உள்ளிட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சிக்காக 51 ஆண்டுகள் உழைத்துள்ளேன்; பல போராட்டங்களில் பங்கேற்று 7 முறை சிறைக்கு சென்றுள்ளேன். அது மக்களுக்காக நடைபெற்ற போராட்டங்கள் காரணமாகவே என்றும் கூறினார்.
மேலும், தி.மு.க. மீது கடும் விமர்சனம் முன்வைத்து, ஊழல் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டினார். நாட்டின் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் தவறு எதுவும் இல்லை என்றும், அதனை விமர்சிப்பது அரசியல் நோக்கத்துடன் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
தி.மு.க. மக்கள் ஆதரவை இழந்துள்ளதாகவும், இந்த தேர்தலில் தோல்வி அடையும் அச்சம் அவர்களிடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் விமர்சித்து, திறமையான நிர்வாகம் இல்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
