ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியுள்ளது.
இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது.
130 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்
இரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீராங்கனைகள் முனீபா அலி 2 ரன்களிலும், ஷாவல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரோஷா 21 ரன்கள் எடுத்து ஓரளவு பங்களிப்பு அளித்தார்.
அணியின் கேப்டன் பாத்திமா சனா சிறப்பாக விளையாடி 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
இலங்கைக்கு தடுமாற்றமான தொடக்கம்
131 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி அத்தபத்து 5 ரன்களிலும், இமேஷா 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
சஞ்சனா 0 ரன்னிலும், ஹாசினி 3 ரன்னிலும் வெளியேறியதால் இலங்கை அணி தடுமாறியது.
இதன்பின் ஹர்ஷித்தா 36 ரன்கள் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். கவிஷா 33 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
வெற்றியை உறுதி செய்த இலங்கை
பின்னர் களமிறங்கிய நிலாக்சிகா 13 ரன்களும், கவுஷிஜனி 14 ரன்களும் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இலங்கை அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பைனலில் இந்தியா – இலங்கை
முதல் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.
இதையடுத்து செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
