பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் புறக்கணிப்பை கண்டித்து கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
ராவல்கோட் உள்ளிட்ட பகுதிகளில் உரிமைகளை வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கையில் பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் கூட்டு அவாமி அதிரடி குழு, கடையடைப்பு மற்றும் போக்குவரத்து முடக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இதற்கிடையில், போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் உணவுப் பொருட்கள், தானியங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் மூலம் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி மக்களின் எதிர்ப்பை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், போராட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளியுலகிற்கு பரவாமல் தடுக்க சில பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உணவுப் பொருட்கள் தடை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கூட்டு அவாமி அதிரடி குழுவின் தலைவர் சர்தார் அமான் கான், “ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல. மக்களின் விருப்பத்தை மதித்து ஜனநாயக ஆட்சி நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், மக்களின் உரிமைகளை புறக்கணிக்கும் நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
