“அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை” – அர்ஜுன் சம்பத் கடும் விமர்சனம்
திருவாரூர்: “அரசியலில் தற்போது யாருக்கும் வெட்கமில்லை” என்று ஹிந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்ந்து வருவதாக குற்றம்சாட்டினார்.
“புதிய முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே மாநிலத்தில் 40க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.
கோவை, நாகை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களும் பதிவாகியுள்ளன” என்று அவர் கூறினார்.
மேலும், “திமுக ஆட்சியில் நடந்த சம்பவங்கள் தற்போது இந்த ஆட்சியிலும் தொடர்கின்றன” என்றும் தெரிவித்தார்.
டாஸ்மாக் மற்றும் போதைப்பொருள் பிரச்னைகள் குறித்து பேசிய அவர், “பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பதற்காக முதல் கையெழுத்து போட்டதாக கூறினாலும், அதில் எந்த பயனும் இல்லை” என்று விமர்சித்தார்.
“மாநிலத்தில் நடக்கும் பல கொலை சம்பவங்களுக்கும் போதைப்பொருள் பயன்பாடே முக்கிய காரணமாக உள்ளது” என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
மேலும், “டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதால் மட்டும் பிரச்னை தீராது. அவற்றை முழுமையாக மூட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தமிழக வெற்றிக் கழக அரசை விமர்சித்த அவர், “திமுக ஆட்சியைப் போலவே தற்போது தவெக ஆட்சியும் செயல்படுகிறது” என்றார்.
அதேபோல், “விஜயை ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என்று விமர்சித்த திருமாவளவனின் விசிகவை சேர்ந்த வன்னியரசுக்கு தற்போது அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
“இன்றைய அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை” என்று அர்ஜுன் சம்பத் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
