மதுரை: தமிழக அரசின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட வெங்கல மூர்த்தி நகர் பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு அப்பகுதியில் செயல்பட்டு வரும் குவாரிகள் காரணமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், முதல்வருடன் ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், அமைச்சர்கள் துறைவாரியாக பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், ஒவ்வொரு துறையின் நிதிநிலை, கடன் சுமை மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தப்படும் என்றார்.
இந்த ஆய்வுகள் நிறைவடைந்த பிறகு, தமிழக அரசின் அனைத்து துறைகளின் தற்போதைய நிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
