சென்னை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவரது பேச்சுக்கு திமுக தலைமையும் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் பதவியும் அதிகாரமும் இழந்த பிறகு, விரக்தி மற்றும் அகங்காரம் காரணமாக சிலரின் பேச்சின் தரம் எந்த அளவுக்கு குறைகிறது என்பதற்கு அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சே உதாரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அவரது பேச்சில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமல்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களையும் இழிவுபடுத்தும் மனநிலையை காட்டுகின்றன. சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக போராடி வரும் ஒரு சமூகத்தை இவ்வாறு அவமதிப்பது வெட்கக்கேடானது” என்றும் தெரிவித்துள்ளார்.
“திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர உழைத்தவர்களில் நாங்களும் ஒருபங்கு. எங்களுக்கும் பதிலடி கொடுக்க தெரியும். ஆனால் அரசியல் நாகரிகத்தை மதித்து திமுக தலைமையின் பதிலை காத்திருக்கிறோம்” என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
மேலும், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் குறித்து தொடர்ந்து தரக்குறைவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது திமுக தலைமையின் ஒப்புதலோடு நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த மொழியை திமுக ஆதரிக்கிறதா? இல்லையெனில் உடனடியாக கண்டிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பயன்படுத்துவது அரசியல் கலாச்சாரம் அல்ல. அது அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, அனிதா ராதாகிருஷ்ணன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், திமுக தலைமையும் இதை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
