கவுகாத்தி: அசாம் சட்டசபையில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், லிவ்-இன் உறவில் வாழும் நபர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்ற முக்கிய அம்சம் இடம்பெற்றுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அசாம் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தது. தேர்தலுக்கு முன்பாகவே பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில், அசாம் சட்டசபையில் தற்போது பொது சிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின் முக்கிய அம்சமாக, திருமணம் செய்யாமல் லிவ்-இன் முறையில் ஒன்றாக வசிக்கும் ஆணும் பெண்ணும் தங்களது உறவை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஹிமாந்த பிஸ்வ சர்மா கூறுகையில், “லிவ்-இன் உறவுகளை பதிவு செய்வதன் மூலம், அந்த உறவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும். அவர்களின் நலன்களும் பாதுகாக்கப்படும்” என்றார்.
மேலும், திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுக்காக பதிவாளர்கள் நியமிக்கப்படுவது போல, லிவ்-இன் உறவுகளை பதிவு செய்ய தனியாக பதிவாளர்களை நியமிக்கவும் இந்த சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், இந்த பொது சிவில் சட்டத்திலிருந்து பழங்குடியின மக்களுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அசாம் அரசு தெரிவித்துள்ளது.
