ஹிந்து விரோத போக்கால் திமுக அரசு தேர்தலில் துரத்தியடிக்கப்படும்: நயினார் நாகேந்திரன்
சென்னை: திருந்தாத ஹிந்து விரோத திமுக அரசு தனது அராஜகப் போக்கால் தேர்தலில் துரத்தியடிக்கப்படும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என திமுக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற போலியான காரணங்களை திமுக அரசு தங்கள் அரசியல் வசதிக்காக பயன்படுத்தி வருகிறது என்பதை நீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் தீபத்தூண் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கே சொந்தமானது என்பதையும் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்புக்காக நீதிமன்ற அமர்வுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.
பலமுறை நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட்டும் திருந்தாமல், தொடர்ந்து ஹிந்து விரோத கருத்துகளை உமிழ்ந்து வரும் திமுக அரசு, தனது அராஜகச் செயல்களாலேயே ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கப்படும். இந்த அராஜகப் போக்கு வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மக்கள் மூலம் அடக்கப்படும்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கிய சில மணி நேரங்களுக்குள்ளேயே, அதனை எதிர்த்து மீண்டும் மேல்முறையீடு செய்வதாக திமுக அரசு அறிவித்துள்ளது. இது நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத அதன் மனநிலையை வெளிப்படுத்துகிறது.
தமிழர் பண்பாட்டை அடக்க நினைக்கும் திமுக அரசு, எத்தனை முறை நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட்டாலும் திருந்தாமல், மீண்டும் மீண்டும் அதே பாதையில் பயணித்து வருகிறது. தனது இந்து மத விரோதப் போக்கை எப்போது கைவிடும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
தனது பிரிவினைவாத அரசியலுக்கு நீதிமன்றத்தில் கிடைத்த கண்டனம் போதாதெனில், வரவிருக்கும் தேர்தலில் தமிழக மக்கள் வழங்கும் தீர்ப்பே திமுக அரசை அடக்கப் போகிறது. இன்னும் சில நாட்களே உள்ளன. எத்தனை மேல்முறையீடுகள் செய்தாலும், தமிழர் பண்பாட்டை காக்கும் மக்கள் சக்தி வெற்றி பெறும். தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவது 100 சதவீதம் உறுதி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
