நமது நிருபர்: ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் பேசியதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருவதால், சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு பொதுநிகழ்ச்சியில் கருணாஸ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: “நான் எதையும் சந்திக்க தயாராக சொல்கிறேன். ஹிந்து என்று ஒரு மதமே கிடையாது. நான் சைவ மதத்தைச் சேர்ந்தவன். சிவனையும் முருகனையும் தொன்றுதொட்டு ஆண்டுகளாக வணங்கி வந்தவன். இந்தியாவில் பல மதங்கள் உள்ளன.
புத்த மதம் உள்ளது, சைவம் உள்ளது, சமணம் உள்ளது, வைணவம் உள்ளது. இதுபோல பல மதங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல் இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற மதங்களும் உள்ளன. இத்தனை மதங்கள் இருக்கும் போது ஹிந்து என்ற பெயர் எங்கு இருந்து வந்தது?
வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் நிர்வாக வசதிக்காக பல மதங்களை சேர்ந்த மக்களை ஒரே பெயரில் அழைக்க ‘ஹிந்து’ என்ற பொதுப் பெயரை பயன்படுத்தினர். அதனால் ஹிந்து என்பது ஒரு மதம் அல்ல.
நான் சிவனை வழிபடுகிறேன், நீங்கள் பெருமாளை வழிபடுகிறீர்கள். நாமிருவரும் ஹிந்துக்கள் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஹிந்து என்பது பல மதங்களின் பொதுப்பட்டியல் மட்டுமே,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியதாக குற்றம் சாட்டி பலர் சமூக வலைதளங்களில் கருணாஸுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
