ஹிந்து சமூகத்தில் பாகுபாடு இல்லை; அனைவரும் ஒன்றே – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
புதுடில்லி:
ஹிந்து சமூகம் சாதி, மதம், மொழி என பிரிந்து இருப்பதாக உலகத்தின் பார்வைக்கு தோன்றினாலும், ஹிந்து சமூகத்திற்குள் எந்தப் பாகுபாடும் இல்லை; அனைவரும் ஒன்றாகவே வாழ்கின்றனர் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பிருந்தாவனத்தில் நடைபெற்ற சனாதன கலாசார திருவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது, ஹிந்து சமூகத்திற்குள் எந்த விதமான வேற்றுமையும் இல்லை என்றும், சமூகத்தில் வாழும் அனைவரையும் ஒன்றாகவே ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது என்றும் அவர் கூறினார்.
ஹிந்துக்களில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், ஒவ்வொரு பிரிவிலும் தனக்கு நண்பர்கள் உள்ளதாகவும், அவர்களுடன் உணவு பகிர்ந்து, உரையாடி, நண்பர்களாகவே பழகி வருவதாகவும் மோகன் பாகவத் தெரிவித்தார். சாதி, சமூகம், மொழி அடிப்படையில் ஹிந்துக்கள் பிரிந்து இருப்பதாக உலகம் நினைத்தாலும், உண்மையில் ஹிந்து சமூகம் ஒற்றுமையாகவே உள்ளது என்றார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நுாறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஹிந்து சம்மேளனங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இது அமைப்பின் பலத்தை காட்டுவதற்காக அல்ல என்றும் அவர் விளக்கினார்.
இன்றைய சூழலில் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும், அவற்றைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் தீர்வு கிடைக்காது என்றும் கூறிய மோகன் பாகவத், பிரச்னைகளை விவாதிப்பதை விட தீர்வுகளை கண்டறிய முன்னுரிமை தர வேண்டும் என்றார்.
இதனிடையே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நுாற்றாண்டு பயணத்தை விளக்கும் வகையில் தயாராகி வரும் ‘ஷதக்’ திரைப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா டில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ். காலப்போக்கில் பரிணமித்து விரிவடைந்து வருவதாகவும், ஆனால் அதன் அடிப்படை சிந்தனை மாற்றமின்றி தொடர்வதாகவும் தெரிவித்தார்.
விதைக்குள் இருந்து மரம் வளர்வதைப் போல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வளர்ச்சி இயல்பாக பரிணமித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
