ஹிந்து கோவில்களை அழித்தவர்களை புகழ்வதாக காங்கிரஸ் மீது பா.ஜ. குற்றச்சாட்டு
புதுடில்லி:
ஹிந்து கோவில்களை அழித்த கஜினி முகமதுவையும், டில்லியை கைப்பற்றிய லோதி வம்சத்தையும் காங்கிரஸ் தொடர்ந்து புகழ்ந்து வருவதாக பா.ஜ., கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
டில்லியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, கஜினி முகமதும் லோதி வம்சத்தினரும் இந்தியாவை ஆண்டவர்கள் என்றும், அவர்களை வெளிநாட்டினர் அல்லது அன்னியர்கள் என அழைப்பது தவறானது என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அரசியல் ரீதியாக அவர்களை வெளிநாட்டினர் என கூறினாலும், உண்மையில் அவர்கள் இந்தியாவுடன் இணைந்தவர்களே என்ற வகையில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஹமீத் அன்சாரியின் முன்னோர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகவும், தேசிய அளவில் முக்கிய தலைவர்களாகவும் இருந்த நிலையில், அவரது இந்த கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே பிரதிபலிக்கின்றன என பா.ஜ., விமர்சனம் முன்வைத்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறியதாவது:
நாட்டின் உண்மையான வரலாற்றை காங்கிரஸ் தொடர்ந்து திரித்துக்கூறி வருகிறது. ஹிந்துக்களின் அடையாளங்கள், புராதன சின்னங்கள் மற்றும் கோவில்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளை காங்கிரஸ் குறைத்து காட்ட முயல்கிறது. ஹமீத் அன்சாரியின் கருத்துகள் தனிப்பட்டவை அல்ல; அவை காங்கிரஸ் கட்சியின் சிந்தனையில் ஊறியவை.
கடந்த 2020ஆம் ஆண்டு டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வன்முறைகளுக்குக் காரணமாக குற்றம்சாட்டப்பட்ட ஷர்ஜீல் இமாம், உமர் காலித் ஆகியோரை காங்கிரஸ் இளம் தலைவர்கள் என புகழ்ந்தது இதற்கான எடுத்துக்காட்டாகும். தற்போது, சோமநாதர் கோவிலை அழித்து அவமதித்த கஜினி முகமதுவையும், டில்லியை கைப்பற்றிய லோதி வம்சத்தையும் காங்கிரஸ் தரப்பினர் புகழ்ந்து பேசுவது கண்டிக்கத்தக்கது.
கஜினி முகமது, ஹிந்துக்களுக்கு எதிராக பல்வேறு அட்டூழியங்களை நடத்தியதாக வரலாற்று பதிவுகள் கூறும் நிலையில், அவுரங்கசீப் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் குற்றங்களை காங்கிரஸ் மூடிமறைக்க முயல்கிறது என்றும் பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
வரலாற்று ஆய்வுகளின்படி, 10 மற்றும் 11ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவுக்குள் நுழைந்த கஜினி முகமது, பெருமளவில் செல்வங்களை கொள்ளையடித்து சென்றதுடன், ஹிந்து கோவில்கள் மற்றும் மத அடையாளங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இத்தகைய ஆட்சியாளர்களை புகழ்வது வரலாற்றை அவமதிப்பதாகும் என பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
