சென்னை: 2026–2027ம் நிதியாண்டுக்கான வேளாண் இடைக்கால பட்ஜெட்டை, தமிழக சட்டசபையில் அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்க ரூ.4.5 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் கீழ் ரூ.178 கோடி செலவில் 21,35,000 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் 4,150 சோலார் பம்புசெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன.
மக்காச்சோள சாகுபடி பரப்பு 10 லட்சம் ஏக்கரில் இருந்து 12 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது. ரூ.78 கோடி மதிப்பிலான மக்காச்சோள உற்பத்தி ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 1.50 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். எண்ணெய்வித்துப் பயிர்களின் சாகுபடி ஊக்குவிப்பிற்காக ரூ.229 கோடி ஒதுக்கப்பட்டதில், 14 லட்சம் ஏக்கர் பரப்பில் 7.54 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
விவசாயிகளுக்கு 2 லட்சம் புதிய மின் இணைப்புகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 77,499 இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டதுடன், 1,320 இயந்திர வாடகை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
கோவையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் முதன்முறையாக 2021–22ம் ஆண்டில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டு, கடந்த ஐந்து வேளாண்மை பட்ஜெட்டுகளில் ரூ.1,94,076 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
முக்கனிகள் சாகுபடி பரப்பு விரிவாக்கம் மூலம் 39,000 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். மரவள்ளி கிழங்கு, மல்லி உற்பத்தியில் தமிழகத்திற்கு முதலிடம்; கொய்யா உற்பத்தியில் 2வது இடம் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் 186 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சிறுதானியங்கள் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ‘கருணாநிதி வேளாண் வளர்ச்சித் திட்டம்’ அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்தப்பட்டு, 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 70% மானியம் வழங்கப்பட்டதில் 17,340 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். நுண்ணீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 5,13,000 விவசாயிகளுக்கு 100% மானியம் வழங்கப்பட்டுள்ளது.
பசுமைக்குடில் மற்றும் நிழல்வலைக் குடில் சாகுபடிக்கு ரூ.91 கோடி செலவில் 23,55,000 சதுர மீட்டர் பரப்பில் ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது. மிளகாய், மஞ்சள், மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட சுவைதாளிதப் பயிர்களின் சாகுபடி விரிவாக்கம் மூலம் 29,855 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.
சென்னை மற்றும் கோவையில் 4 புதிய உணவு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணவரை இழந்த பெண்களுக்கு வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்பிற்கு 100% மானியம் வழங்கப்பட்டுள்ளது.
சோழவந்தான் வெற்றிலை, பண்ரூட்டி பலா உள்ளிட்ட 9 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தக்காளி, வெண்டை, கத்திரி சாகுபடி 1 லட்சம் ஹெக்டேரில் விரிவாக்கம் செய்ய 1.68 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் கல்வி மற்றும் கல்லூரிகளுக்காக ரூ.3,065 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன், அணைகளின் ஆயக்கட்டுப் பகுதிகளில் ரூ.498 கோடி செலவில் 4,580 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
