சென்னை: கடந்த 5 ஆண்டுகளாக வீண் விளம்பரங்களுக்கு மட்டுமே தமிழக அரசு பல நூறு கோடி ரூபாய் செலவிட்டுள்ளது என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகம் முழுவதுமுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 16 உறுப்புக் கல்லூரிகளின் பல்வேறு துறைகளில் சுமார் 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் கடந்த ஜனவரி 31 அன்று பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நிதிநிலைமை காரணம் கூறி ஆசிரியர்களை பணிநீக்கம் செய்துள்ள திமுக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.
திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 153-ல் பத்து ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிகமாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தெரிவித்திருந்தது. ஆனால் பல ஆண்டுகளாக காத்திருந்தவர்களை பணிநீக்கம் செய்து துரோகம் செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 45.44% ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்பது கடந்த டிசம்பர் மாத செய்திகளில் தெரியவந்தது. இந்த நிலையில் பணி நிரந்தரம் செய்யாமல், காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024–2025 ஆண்டில் மட்டும் சுமார் 110 கோடி ரூபாய் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஊரக உள்ளாட்சித்துறைக்கு ரூ.500 கோடி விளம்பரச் செலவாக ஒதுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளாக விளம்பரங்களுக்கு பல நூறு கோடி செலவிடும் அரசுக்கு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய நிதி இல்லை என்றால், முதல்வர் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்?
உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு பணி வழங்குவதோடு, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
