டாக்கா:
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் தொடரும் நிலையில், மேலும் ஒரு ஹிந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
சுனம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பங்கடோஹோர் கிராமத்தைச் சேர்ந்த ஜாய் மகாபத்ரே என்ற ஹிந்து இளைஞர், கடந்த வியாழக்கிழமை கொல்லப்பட்டுள்ளார். அவரை உள்ளூர் கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அமிருல் இல்லாம் என்ற நபர் விஷம் வைத்து அடித்து கொலை செய்ததாக ஜாயின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் திடீர் நிகழ்வு அல்ல; திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜாய் மகாபத்ரே மரணத்தைத் தொடர்ந்து, கடந்த நான்கு வாரங்களில் மட்டும் வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியான இந்த வன்முறைச் சம்பவங்கள், நாட்டின் ஒட்டுமொத்த அமைதியை கேள்விக்குறியாக்கியுள்ளதாக சமூக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
