சென்னை: மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதனைச் சரிசெய்ய முடியாமல் திமுக அரசு அப்பாவி விவசாயிகளைப் பழிவாங்கி வருவதாகவும், தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இயங்கி வரும் கறிக்கோழி பண்ணைகளில் கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கூலியை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்துவதாக அழைப்பு விடுத்து விவசாயிகளை ஏமாற்றிய திமுக அரசு, பின்னர் சென்னை வந்த சுமார் 7,000 விவசாயிகளை கைது செய்து அடக்குமுறை மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது கிலோ ஒன்றுக்கு ₹6.50 மட்டுமே கூலியாக வழங்கப்படும் நிலையில், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் ₹20 வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாக இருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதனை பரிசீலிக்க நிறுவனங்களும் அரசும் முன்வரவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விவசாயிகள் நியாயமான கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுத்தால் கைது செய்வது திமுக அரசின் வழக்கமாகிவிட்டதாகவும், உடனடியாக கைது செய்யப்பட்ட அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
