புதுடில்லி: அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில், இந்தியாவின் விவசாயம் மற்றும் பால்வளத் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.
பிப்ரவரி 2ம் தேதி, இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தார். இதன்படி, இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரி, 18 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல அம்சங்கள் இந்தியாவுக்கு பாதகமானவை என்றும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த சூழலில், லோக்சபாவில் பேசிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் விவசாயம் மற்றும் பால்வளத் துறைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளன என்று உறுதியாக தெரிவித்தார்.
2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று வந்ததிலிருந்து, இரு நாடுகளும் பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன என்பதை அவை உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள் என அவர் குறிப்பிட்டார். இதனை மனதில் கொண்டு, கடந்த ஆண்டிலிருந்து இரு தரப்பினரிடையிலும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆழமான விவாதங்கள் நடத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
இரு தரப்பினரின் முக்கியமான மற்றும் பரந்த விருப்பங்களை கருத்தில் கொண்டு, முக்கிய துறைகளை பாதுகாக்க முயற்சிப்பது இயல்பான ஒன்றாகும் என்றும் அவர் கூறினார். சிறந்த சாத்தியமான முடிவை உறுதி செய்ய, ஒவ்வொரு தரப்பும் தங்களது முக்கிய துறைகளை பாதுகாக்க விரும்புவது இயல்பு என்றும், அந்த பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவின் முக்கிய துறைகளான விவசாயம் மற்றும் பால்வளத் துறைகளின் நலன்களை பாதுகாப்பதை வெற்றிகரமாக உறுதி செய்துள்ளோம் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
