விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர்: கஸ்துாரி கிண்டல்
திருப்பரங்குன்றம்:
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத தமிழக முதல்வர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார் என பா.ஜ., கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்துாரி குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க., ஆட்சியில் அரசியல் காரணமாக கைது செய்யப்பட்ட முதல் பெண் நான்தான் என தெரிவித்தார். இன்றைக்கு திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறிய கஸ்துாரி, கடந்த 20 நாட்களாக மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்லும் பாதை திறக்கப்படவில்லை என்றும், தர்காவில் சந்தனக்கூடு நடைபெறுவதற்காக மட்டும் அந்த பாதை திறக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
நீதிமன்ற உத்தரவு, ஹிந்து நம்பிக்கை, தீபத்தூண் ஆகிய அனைத்தையும் அவமதிக்கும் செயல்கள் நடைபெறுகின்றன என்றும், அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தனிப்பட்ட முறையில் அவமதிக்கின்றனர் என்றும் அவர் விமர்சித்தார். தீபம் ஏற்ற இரண்டு பேர் எண்ணெய் வாங்கினால் கூட அரசுக்கு நல்லதுதானே, டாஸ்மாக்கில் மட்டும் தான் பாட்டில் வாங்க வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
கலவரம் வரும் என கூறிய சு.வெங்கடேசனிடம், இப்போது சந்தோஷமாக உள்ளாரா என்றும், ஹிந்து மக்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார். தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரிக்கை வைத்துள்ளவர்கள் எந்த கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் கிராம மக்கள், பூர்வீக குடியினர் என்றும் கூறினார். அனைவரும் முருகன் கட்சியினரே எனவும், தனக்கும் முருகனே குலதெய்வம் என்றும் அவர் தெரிவித்தார்.
தீபத்தூணில் தீபம் ஏற்றினால் சோறு கிடைக்குமா என திருமாவளவன் கேட்கிறார் என்றும், அவர் கட்சியை கலைத்தால் பத்தாயிரம் பேருக்கு சோறு போடுவதாக கூறினார். சந்தனக்கூடு கொடி ஏற்றியதால் அனைவருக்கும் சாப்பாடு கிடைக்குமா என அவர் கேட்பாரா என்றும், சீட்டு பேரத்தைப் பார்க்கச் சொல்லி, எங்கள் மத நம்பிக்கையில் தலையிட வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல முடியாத முதல்வர், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மரத்துடன் செல்கிறார், நோன்பு கஞ்சி குடிக்கிறார் என்றும் கூறிய கஸ்துாரி, அதை தவறு என சொல்லவில்லை என்றும், அனைவரும் சகோதரர்களே என்றும் தெரிவித்தார். ஆனால் ஹிந்து என்றால், சனாதனம் என்றால் ஏன் ஒழிப்போம் என்று பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் முடித்து திரும்பிய கஸ்துாரி, தீபத்தூண் பிரச்னையில் கைது செய்யப்பட்டு விடுதலையான 17 பெண்களை சந்தித்தார். உணர்ச்சிவசப்பட்ட அவர், அவர்களை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தினார். அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
பின்னர், தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி தீக்குளித்து உயிரிழந்த பூர்ணசந்திரன் வீட்டிற்கு சென்று, அவரது மனைவி மற்றும் தாயை சந்தித்து ஆறுதல் கூறினார். குடும்பத்திற்கு உதவுவதாகவும் அவர் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது, நகர் பா.ஜ., தலைவர் மாரிசக்ரவர்த்தி மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் உடன் இருந்தனர்.
