சேலம்: சேலத்தில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி கேவிபி கார்டன் உள் வளாகத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த கூட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. கடும் வெயிலில் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நின்றிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜ் (37) என தெரியவந்தது. அவர் சேலத்தில் உள்ள வெள்ளி பட்டறையில் தொழிலாளராக பணியாற்றியவர் என்றும் கூறப்பட்டது.
கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் மயக்கம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் வெயில் இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
