சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அரசியல் களம் இப்போது அதிகாரபூர்வமாக சூடுபிடித்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க., கட்சி முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களம் இறங்க உள்ளது. இதற்காக தேர்தல் கமிஷனிடம் பொது சின்னம் கோரப்பட்ட நிலையில், 234 தொகுதிகளுக்கும் ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
த.வெ.க., தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறாத கட்சி என்பதால், இந்த விசில் சின்னம் இந்த தேர்தலுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
த.வெ.க., சமூக ஊடகப் பிரிவு துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் கூறுகையில், தேர்தல் கமிஷனிடம் அளித்த விண்ணப்பத்தில் விசில் சின்னத்தை முதல் விருப்பமாக குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
மேலும், ஆட்டோ, மோதிரம் உள்ளிட்ட 10 சின்னங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், விஜய் விரும்பிய விசில் சின்னமே இறுதியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த சின்ன ஒதுக்கீட்டை தொடர்ந்து, பிரவீன் சக்கரவர்த்தி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில்,
“தமிழக சட்டசபை தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது; அனைத்து கட்சிகளும் இப்போது தயாராகி விட்டன” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு, காங்கிரஸ் கட்சியில் உள்ள விஜய் ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே நேரத்தில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ‘டார்ச் லைட்’ சின்னம் மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
