விஜயையும், என்னையும் பாஜக பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் – சீமான்
நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம், திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டிசம்பர் 27 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை சேர்க்க வேண்டும், மதுவிலக்கு, நீட் விலக்கு உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜாக்டோ–ஜியோ, செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள் இன்றோ நேற்றோ தொடங்கியவை அல்ல என்றும், அவை கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதாகவும் கூறினார். கொரோனா காலத்தில் அவசரமாக பணிக்கு அழைக்கப்பட்ட செவிலியர்கள் அப்போது கடவுள், தேவதை போல் பார்க்கப்பட்டதாகவும், தற்போது தேவையற்றவர்களாக பார்க்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
பகுதி நேர ஆசிரியர்கள், தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்கள் என நாடே போராட்டக்களமாக மாறியுள்ளதாக சீமான் குறிப்பிட்டார். நல்லாட்சி என்பது தற்போது சொல்லாட்சியாகவும், வெற்று வார்த்தையாகவும் மாறிவிட்டதாகவும், மடிக்கணினி, மகளிர் உரிமைத்தொகை வழங்குகிறோம் என மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பறிப்பதே அரசியலாகி விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆசிரியர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டால் நாடு எதை நோக்கி செல்கிறது என்பதை சிந்திக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் ஊழியர்கள் போராடினால் அரசு கண்டு கொள்ளாமல் இருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். குடித்துவிட்டு உயிரிழப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் அரசு, பள்ளி சுவர் இடிந்து மாணவர் உயிரிழந்தால் எவ்வளவு இழப்பீடு வழங்குகிறது என்றும், ராணுவ வீரர்களுக்கான மரியாதை என்ன என்றும் அவர் கேட்டார்.
கல்லூரிகளில் அரசியல் பேசக்கூடாது எனக் கூறும் ஆட்சி, சினிமா பேச அனுமதிப்பது இரட்டை நிலைப்பாடு என்றும், இறை வழிபாட்டை விமர்சிக்கும் இந்த கட்சி திரை வழிபாட்டை போற்றுவதாகவும் சீமான் விமர்சித்தார். “மக்கள் தாங்களே புரட்சி செய்வார்கள்” என்ற லெனின் கூற்றை மேற்கோள் காட்டிய அவர், இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிகளை நினைவுபடுத்தினார். “எல்லா வீட்டிலும் தீ பற்றி எரிந்தது; என் வீடு எரியாது என யாரும் உறுதி தர முடியாது. இது எங்களது தீ அல்ல; எங்கள் முன்னோர் ஏற்றி வைத்த தீ” என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய சீமான், “இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல; அது வீழ்ச்சி. உங்கள் குறை கேட்க வந்த பிள்ளைகள் நாங்கள் அல்ல; குறை தீர்க்க வந்த பிள்ளைகள். நாங்கள் நினைக்கப் பிறந்தவர்கள் அல்ல; நிரூபிக்கப் பிறந்தவர்கள்” என்றார். “234 தான் எங்களது இலக்கு, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவது எங்கள் இலக்கு. விஜயையும், என்னையும் பாஜக பெற்றெடுத்த போது, அருகில் இருந்து பிரசவம் பார்த்தது எங்கள் அண்ணன் திருமாவளவன் தான்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்பு திருச்சியில் பேசிய திருமாவளவன், “நான் பெரியார், அம்பேத்கரின் பிள்ளை. ஆனால் சீமானும் விஜய்யும் சனாதன சக்திகளுக்கு துணை போகும் வகையில் செயல்படுகிறார்கள். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவது தெளிவாக தெரிகிறது. இருவரும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்” என விமர்சித்திருந்தார்.
