சென்னை:
பகுதி நேர ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளியதன் மூலம் திமுக அரசு நம்பிக்கை மோசடி செய்துள்ளதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தனது தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு சதவீதக் கணக்குகளை கூறி வருவதாக விமர்சித்துள்ளார். ஆனால், பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நினைவூட்ட, வாக்குறுதி எண் 181-ஐ நெற்றியில் எழுதி போராடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2016 சட்டசபை தேர்தலில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக திமுக வாக்குறுதி அளித்ததோடு, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் சென்று அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு 10 சதவீத வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், இந்நிலையில் அடுத்த தேர்தலுக்காக புதிய வாக்குறுதிகள் தயாரிக்க முதல்வர் ஸ்டாலின் தனது தங்கை தலைமையில் குழு அமைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது திமுக தமிழக மக்களை எவ்வளவு அலட்சியமாக பார்க்கிறது என்பதற்கான தெளிவான உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக செய்த இந்த நம்பிக்கை மோசடிக்கு, 2026 சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள் என அண்ணாமலை எச்சரித்துள்ளார்.
