புதுடில்லி:
இந்தியாவின் இளைஞர் சக்தி மிகுந்த ஆற்றலுடன் இருப்பதாகவும், நாட்டை வளமான தேசமாக மாற்றுவதில் அவர்கள் உறுதியாக செயல்படுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளையோர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, “விக்சித் பாரத்” என்ற கருப்பொருளில் 29-வது தேசிய இளையோர் திருவிழா டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 3,000 இளைஞர்களுடன் நேரடியாக கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “உற்சாகமும் ஆர்வமும் நிறைந்த நமது இளைஞர் சக்தி மிகவும் வலிமையானது. வளமான இந்தியாவை உருவாக்கும் இலக்கில் அவர்கள் உறுதியாக உள்ளனர். ஜனவரி 12-ம் தேதி நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து வரும் இளைஞர்களுடன் உரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
