ஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக் காலத்தில், காலிஸ்தான் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்ததுடன், கனடா தன் நாட்டில் காலிஸ்தானி செயல்பாடுகளுக்கு இடமளிக்கிறது என இந்தியா விமர்சித்தது. இதனால் இருநாடுகளுக்கிடையேயான தூதரக உறவில் பதற்றம் ஏற்பட்டது.
பின்னர் மார்க் கார்னி தலைமையில் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, இருநாடுகளும் உறவை சீர்படுத்த முயற்சித்தன. தற்போது கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தியா வர உள்ள நிலையில், இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடியை சந்தித்து எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. மேலும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கனடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம், இந்தியாவுடன் உறவை மேலும் வலுப்படுத்த கனடா விருப்பம் கொண்டிருப்பது தெளிவாகியுள்ளது.
