வங்கதேசத்தில் ஹிந்து தொழிலாளி சுட்டுக்கொலை; ஒரே மாதத்தில் 3வது கொலை சம்பவம்
மைமன்சிங்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடைபெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு இந்து தொழிலாளி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டம், பலுகா உபஜிலா பகுதியில் செயல்படும் லபிப் குழுமத்திற்குச் சொந்தமான சுல்தானா ஸ்வெட்டர்ஸ் லிமிடெட் என்ற ஆடைத் தொழிற்சாலையில், பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றி வந்த பஜேந்திர பிஸ்வாஸ் (42) என்பவர், திங்கட்கிழமை மாலை சுமார் 6.45 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தில், அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நோமான் மியா (29) என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர், பஜேந்திர பிஸ்வாஸுடன் ஒரே பிரிவில் பணியாற்றியவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, வங்கதேச மாணவர் அமைப்பு செய்தித் தொடர்பாளர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன், மைமன்சிங்கில் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ராஜ்பாரி மாவட்டம் பாங்ஷா பகுதியில், கிறிஸ்துமஸ் நாளில் இந்து இளைஞர் அம்ரித் மொண்டல் கொல்லப்பட்டார். அம்ரித் மொண்டல் கொலை மத அடிப்படையிலானது அல்ல என்றும், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்த தொடர் கொலை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 12 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீபு சந்திர தாஸ் கொலைக்கு பிறகு, டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவும் தனது கவலைகளை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராக கடுமையான அட்டூழியங்களில் ஈடுபடுவதாகவும், மதச் சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
