டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹிந்து கோவில் மீது குண்டு வீசப்பட்டதில் தலைமை அர்ச்சகர் படுகாயம் அடைந்தார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. கொள்ளை, கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் சொத்துக்கள் அபகரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சம்பவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் பி.என்.பி. கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில், கூமில்லா மாவட்டத்தில் உள்ள ஒரு ஹிந்து கோவிலில் மாலை நேர பூஜை நடைபெற்று கொண்டிருந்தபோது குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தலைமை அர்ச்சகர் கேசவ் சக்கரவர்த்தி கடுமையாக காயமடைந்தார். மேலும் அங்கு இருந்த சில பக்தர்களும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
