டாக்கா: வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் மூலம், கடந்த மூன்று வாரங்களில் ஹிந்துக்கள் மீது நடந்த கொலை சம்பவங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து கோவில்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையே, தொழிலதிபர் கோகோன் தாஸ் மீது தாக்குதல் நடத்தி, அவரை தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவமும் நடந்துள்ளது. இத்தகைய தொடர் சம்பவங்களால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஜஷோர் மாவட்டம் பகுதியில் மேலும் ஒரு ஹிந்து நபர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். **கேசப்பூர் உபாசிலா**வில் உள்ள அருவா கிராமத்தைச் சேர்ந்த ராணா பிரதாப் (45) என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சந்தையில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத சில நபர்கள் ராணா பிரதாப்பை சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் அச்சமும் குழப்பமான சூழலும் நிலவி வருகிறது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, ராணா பிரதாப் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
